தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், புன்னக்காயல் பகுதி தனித்தீவாக மாறி காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உள்பட தென் மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை காலத்தின் வெளிப்பாடாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மழை நீரின் அளவும் அதிக அளவு தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையாக விளங்கும் மருதூர் அணைக்கட்டில் இருந்து மட்டும் சுமார் 74 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வரை வந்து கொண்டிருக்கிறது.
இந்த தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் வங்கக்கடலில் கடைசியாக கடக்கும் இடம்தான் திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் பகுதி. இந்த புன்னக்காயல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தற்போது, தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் இந்த புன்னக்காயல் வழியாக கடலில் கலந்து வருகிறது. தாமிரபரணி தண்ணீர் அதிகமாக வருவதால் புன்னக்காயல் ஊருக்குள் இந்த மழை வெள்ள நீர் புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: நெல்லையை புரட்டிப் போட்ட கனமழை: வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிப்பு!
இதனால் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் தங்களது உடைமைகளையும், பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த தண்ணீர் கலக்கும் இடத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் தற்போது தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருக்கும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.
இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளை இந்த மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வெள்ளம் அதிக அளவு வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் புன்னக்காயல் பகுதி தனித்தீவாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.