சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விவசாய கூலி வேலை செய்வதற்காக ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனர். ஆனால் வேலை கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊரான மேற்கு வங்கம் செல்ல முடிவெடுத்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு சுமார் 4 நால்கள் உணவின்றி தவித்தாகவும், இதனால் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் வட மாநில தொழிலாளர்களை மீட்ட ரயில்வே போலீசார். அவர்களை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செப்டம்பர் 16 ஆம் தேதி சேர்த்தனர்.
இதில் சமர்கான் என்ற நபர் உயிரிழந்த நிலையில் அவருடன் வந்த மற்றொருவருக்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கெட்டுப்போன உணவே காரணம்: இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வருமான தேரணி ராஜன் கூறும்போது,"மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி சமர்கான் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சமர்கானுக்கு கெட்டுப் போன உணவினால் உடல் நல பாதிப்பும் மூச்சுத் திணறலும் இருந்தது. உணவால் ஏற்பட்ட கடுமையான இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரக தொற்றும் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
மோசமான நிலையிலிருந்த நோயாளி ஏழு நாட்கள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது, இறுதியில் பல உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுத்தது. இறப்பதற்கு முன், நோயாளி கடுமையான சிறுநீரகக் காயம் மற்றும் நுரையீரல் வீக்கம் (நுரையீரலில் திரவம் குவிதல்) ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
மேலும் மூளை பாதிக்கப்பட்டது இது அவரது உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு பங்களித்தது. மேலும் அவருக்கு நிமோனியா ஏற்பட்டது. இறுதியில், அவரது நிலை மோசமடைந்தது, பல உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுத்தது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ!
நோயாளிகள் வாந்தி:தொடர்ந்து பேசிய அவர், காலரா உட்படத் தேவையான அனைத்து சோதனைகளையும் நாங்கள் நடத்தினோம். கடுமையான உணவு நச்சுத்தன்மையைக் கண்டறிந்ததன் அடிப்படையில், இரசாயனப் பகுப்பாய்விற்காக வயிற்று மாதிரிகளை அனுப்பியுள்ளோம், மேலும் முடிவுகளுக்காக தற்போது காத்திருக்கிறோம்.
சமர்கான் உட்பட 12 முதல் 13 தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை அருகே தங்கியிருந்த கெட்டுப்போன உணவை உட்கொண்டுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வரும் பிற நோயாளிகள் கூறியதிலிருந்து, ரயில்வே பிளாட்பாரம் அருகே தங்கி மீன் கறியைச் சமைத்துச் சாப்பிட்டது தெரிய வந்தது.
இறப்புக்கான காரணம் வயிற்றுப்போக்குடன் தொடர்புடையது, ஏனெனில் அவர் ஸ்டேஃபிளோகோகஸ் விகாரத்தால் (குறிப்பாக, RA திரிபு) பாதிக்கப்பட்டார். இந்த பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் நச்சுகளை உருவாக்குகிறது.
கெட்டுப்போன உணவை உட்கொண்ட ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, நோயாளிகள் வாந்தி எடுக்கத் தொடங்கினர். இந்த நச்சுகள் உடலைக் கடுமையாகப் பாதிக்கலாம். செப்டம்பர் 16 அன்று தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நோயாளி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தார்.