ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மகள்கள் கண் முன்னே தாய் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சந்தியா (33). அவரது தம்பி சிவா (23). சந்தியா அவரது மூன்று மகள்களுடன், சிவாவுடன் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பரை நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்த நிலையில், எதிர்பாரா விதமாக இருசக்கர வாகனம் மீது அவ்வழியாகச்சென்ற டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சந்தியா, தனது மகள்கள் கண் முன்னே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிவா ஆகிய மூன்று பேரை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்தில் சந்தியாவின் ஒரு மகள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அருகே மதுபோதையில் கடைக்குள் சென்ற கார்..ஓட்டுநர் கைது!
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மது போதையில் காரை ஒட்டி சாலையிலிருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் மதுபோதையில் ஆம்பூர் புறவழிச்சாலையில் தனது காரில் சென்றுள்ளார். அப்பொழுது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி, பின்னர் அருகில் இருந்த இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் நுழைந்துள்ளது.
இந்த விபத்தில், கடையிலிருந்த இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்ததுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், மதுபோதையில் காரை ஓட்டிய அருணை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூரில் 2 கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. இருவர் படுகாயம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இட்டமொழி ரோட்டைச் சேர்ந்தவர் சரவணன் (46). இவரது மனைவி அதிஷ்டலெட்சுமி (44). இவரகள் 2 பிள்ளைகளுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கார் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி பகுதியில் சென்றுகொண்டிருந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் சாமி கும்பிட்டி திரும்பிய கேரள பக்தர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் அதிஷ்டலெட்சுமி மற்றும் அவரது மகள் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெஞ்ஞானபுரம் சப்இன்ஸ்பெக்டர்கள் சண்முகராஜ், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு(54), நிர்மல், ஹரிந்தகுமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் சுற்றுலா வேன் லாரி மீது மோதி விபத்து..வட மாநில ஊழியர் உயிரிழப்பு!
திருப்பூர்: திருப்பூரில் காட்டன் மில்லில் பணி செய்யும் வட மாநிலத் தொழிலாளர்கள் சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் காட்டன் ஆலையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சுமார் 20 பேர் கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்குச் சுற்றுலா செல்ல வேன் மூலம் திருப்பூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாகக் கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, வேன் நெல்லை மாவட்டம் தாழையூத்து நான்கு வழிச்சாலை பாலத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிரி(35) வட மாநில தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 6 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, தாழையூத்து போலீசார் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வாகனத்தில் பயணித்த ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கிராண்ட் செஸ் டூர்; உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா.. 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! - Praggnanandhaa