கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சிட்கோ அருகே உள்ள தண்டவாளத்தில் கல் மற்றும் இரும்பு ஆகியவற்றை வைத்து அந்த வழியாக வரும் ரயிலைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் சென்ற ரயிலை இயக்கிய லோகோ பைலெட் போத்தனூர் ரயில்வே துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டவாள பராமரிப்பு குழுவினர் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மற்றும் இரும்பு துண்டுகளை அப்புறப்படுத்திச் சென்றனர். இதை அடுத்து சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த டி கார்டன் விரைவு ரயில் பத்திரமாக ரயிவே தண்டவாளத்தைக் கடந்து சென்றது.
இந்த நிலையில் அதே தண்டவாளத்தின் மற்றொரு இடத்தில் வைத்திருந்த கற்கள் மீது மங்களூர் - சென்னை விரைவு ரயில் ஏறிச் சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு ஆபத்தும் இன்றி பத்திரமாக ரயிவே தண்டவாளத்தைக் கடந்து சென்றது. இதன் பின்னர் அந்த ரயிலை இயக்கிய லோகோ பைலெட் இது குறித்த தகவலை ரயில்வே போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
லோகோ பைலெட் கூறிய தகவலின் அடிப்படையில் உடனடியாக ரயில்வே தண்டவாள பாதுகாப்பு குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கே சோதனை செய்த போது போலீசாரை பார்த்து பயந்து ஓடிய மூன்றுபேரை மடக்கிப் பிடித்தனர்.
இதன் தொடர்ச்சியாகப் பிடிபட்ட மூவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மூவரும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராக்கேஸ் (21), ஜூஹல் (19) மற்றும் பப்லு (31) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மூவரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மூவரும் சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், அவர்கள் மூவரையும் பிடித்து தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்ததற்கு அபராதம் விதித்துள்ளனர்.
இதை அடுத்து மூவரும் அங்கிருந்து சென்ற நிலையில், அபராதம் விதித்ததில் ஆத்திரமடைந்த மூவரும் மீண்டும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சிட்கோ அருகே உள்ள தண்டவாளத்தில் கல் மற்றும் இரும்பு ஆகியவற்றை வைத்து ரயிலைக் கவிழ்க்கத் திட்டமிட்டது தெரியவந்தது. இந்த நிலையில் மூவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.