சென்னை: சிறுசேரி அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலராக பணியாற்றுபவர் வினோத் குமார். இவர் கடந்த 2ஆம் தேதி, தான் பணிபுரியும் கல்லூரிக்கு சொந்தமான 1.50 கோடி ரூபாய் பணத்தை கல்லூரி உரிமையாளர் வீட்டில் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரை மூன்று இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே வினோத்குமாரை வழிமறைத்து, கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த 1.50 கோடி ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து வினோத் குமார் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி மயிலாப்பூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக வழிப்பறியில் ஈடுபட்டது பழைய கும்பலாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, வினோத்குமார் பணம் கொண்டு செல்லும் தகவலை வழிப்பறி கும்பலுக்கு தெரிவித்தவர் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தகவல் அளித்தது சுனில் குமார் என்பவர் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மீண்டும் பணம் கொண்டு செல்லப்படுவதாக பொய்யான தகவலை சுனில் குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து காவல்துறை கொடுத்த பொய்யான தகவலை நம்பி சுனில் குமார் அரக்கோணம் புறப்பட்டுச் சென்று உள்ளார். அங்கு மறைந்திருந்த போலீசார் சுனில் குமார் மற்றும் வழிப்பறி கும்பலின் தலைவன் திலீப் என்பவரையும் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடன் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வழிப்பறிக்கு திட்டம் தீட்டிய பிரபல ஹவாலா பணம் கொள்ளையன் இம்ரான் என்பவரையும், அவரது கூட்டாளிகளான தினேஷ்குமார், நவீன், அசோக், உலகநாதன், குமார் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், தேர்தல் சமயத்தில் வழிப்பறி செய்த பணத்தை எடுத்துச் சென்றால் பறக்கும்படை அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வோம் என்று கருதி, செங்குன்றம் பகுதியில் உள்ள திலீப்-ன் காதலியின் வீட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு செய்ததில் ரூ.41 லட்சம் மட்டுமே இருந்துள்ளது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள பணம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழிப்பறி சம்பவத்தில் 3 வழக்கறிஞர்களுக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் கொடுக்கும் திட்டத்தின் படி ஹவாலா பணம் கொண்டு செல்லும் நபர்களை குறி வைத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, வழக்கறிஞர்கள் கொடுத்த திட்டத்தின் படியே சிறையில் தனக்கு நண்பர்களான கூட்டாளிகளை வைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக திலீப் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே திருமணம் மீறிய உறவு.. வீட்டை அடித்து நொறுக்கிய கணவர் குடும்பத்தினர்!