ஈரோடு: நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஆ.ராசா கூறியதாவது, “தாளவாடி மலைப்பகுதியில் சாகுபடி செய்யும் கரும்புகளை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு திம்பம் மலைப் பாதையை பயன்படுத்த வேண்டும். ஆனால், மலைப்பாதையில் லாரியில் 8 டன்னுக்கு மேல் கரும்பு எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உரிய நிவாரணத்தை வாங்கித்தர வேண்டும் என தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. உலக நாடுகளைச் சுற்றி வரும் பிரதமர் மோடி, நமது நாட்டில் உள்ள மணிப்பூர் ஏன் செல்லவில்லை? எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் கூட வெளிநாடுகளுக்குச் செல்லவே பிரதமர் முனைப்பு காட்டுகிறார்.
பழங்குடி மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. சமூக நீதியை கடைபிடிக்காமல் மதவாதப் போக்கை கடைபிடிக்கிறார். 5ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. அதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஊடகங்கள் கடமையிலிருந்து தவறுவதைச் சொல்லி நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்தோம்.
அனைத்து ஊடகங்களையும் இவர்களே விலைக்கு வாங்கி விட்டார்கள். 5ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை ஊழல்கள் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கனவே ஏர் இந்தியாவை விற்று விட்டார்கள். இனி பிஎஸ்என்எல்-ஐயும் விற்றுவிடுவார்கள்’ இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணியா? ஈபிஎஸ் ரியாக்ஷன் என்ன?