நீலகிரி: மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை செல்லும் மலை ரயில் இன்று காலை வழக்கம்போல், சுமார் 220 பயணிகளுடன் உதகை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது உதகை மலை ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெர்ன்ஹில் பகுதியில் மலை ரயில் வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தண்டவாளம் குறுக்கே வளர்ப்பு எருமை வந்ததால் மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலை ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியுள்ளது.
எதிர்பாராதவிதமாக நேர்ந்த இந்த விபத்தில் வளர்ப்பு எருமை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இவ்விபத்தில் மலை ரயிலில் பயணம் செய்த 220 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் 220 பணிகளையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உதகை மலை ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.