ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் சத்தியமங்கலம் மற்றும் பவானி சாகர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் பேசிய எல்.முருகன், "தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஆனால், 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் ஒரே இடம் டாஸ்மாக் கடை தான். இந்த அவலநிலையைப் போக்க வேண்டும். இதனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 20 - 30 வயதுடைய இளம் கைம்பெண்கள் அதிகளவில் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன திமுகதான். இவர்கள் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்துள்ளனர்.
அதேபோல ஊர், ஊருக்குக் கஞ்சா போதைப் பொருள் அதிகரித்துள்ளது. அதைக் கடத்துபவர்கள் திமுக காரர்கள். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குப் போதைப் பொருள் கடத்திய வழக்கில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது திரைப்பட இயக்குநர் அமீரிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், விசாரணை முடியும் போது திமுகவின் மெயின் குடும்பத்துடைய கதவு தட்டப்படுவது உறுதி. கிராமங்களில் கஞ்சா விற்பவர்களைத் தட்டி கேட்டால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் எனப் பொய் கூறி ஓட்டு வாங்கி விட்டு தற்போது தகுதி இல்லை என சொற்ப அளவில் கொடுக்கிறார்கள். இந்த அவல நிலையைப் போக்கத் தாமரைக்கு வாக்களியுங்கள்" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியைக் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இந்த வழக்கில் திரைப்பட இயக்குநர் அமீருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில், கோபாலபுரத்து வீட்டு வாசலைத் தட்டுமா? அல்லது முக்கியமான அமைச்சர்கள் வீட்டுக் கதவைத் தட்டுமா? என்பதை விசாரணையின் முடிவில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜிஎஸ்டி திட்டத்தை மக்களும், வியாபாரிகளும் வரவேற்றுள்ள நிலையில், ஸ்டாலின் ஆகட்டும் உதயநிதி ஸ்டாலின் ஆகட்டும் எதை எடுத்தாலும் அரசியல் செய்வதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. அவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" எனத் தெரிவித்தார்.