கோயம்புத்தூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனையொட்டி, அரசியில் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.பேரணி அன்னூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி குருக்கிலியாம்பாளையம், ஜெ.ஜெ நகர், ஜீவா நகர், பொகலூர், குமரன் குன்று வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர்.
அப்போது சாலையில் வந்தவர்கள் சாலையோரம் இருந்த பொதுமக்களிடையே பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோஷமிட்டும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் பாஜக கொடியை கட்டியபடி பேரணியாக சென்றனர். அதில், எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தாமரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டு கொண்டார். இதில் பாஜகவினர் ஏராளமானவர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னூரில் தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சாரம் மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி வழியாக சென்று உதகையில் நிறைவு செய்ய உள்ளனர்.