தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் நகர செயலாளரான இவர், அப்பகுதியில் நடைபெற்று வந்த மத மாற்றத்தை தொடர்ந்து எதிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் 5 நபர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த ஐந்து பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரைச் சேர்ந்த 5 பேர் புகைபடங்களுடன், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம், 5 பேருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், தகவல் கொடுக்க வேண்டிய முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவையும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 வரை நீதிமன்றக் காவல்!