சென்னை: சென்னையில் கடந்த மே மாதம் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பேரை உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்திருந்த இந்த வழக்கினை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இரண்டாவதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, ஆவணங்களை பெற்றுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் எதன் மூலமாக தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டனர்? அவர்கள் வைத்திருந்த வாட்ஸப் குழுவில் வேறு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? வங்கி கணக்குகளில் எவ்வளவு பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளது? இவர்கள் யாரையாவது மனமாற்றம் செய்து தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தார்களா போன்ற விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் தான் குறி! சென்னையை அதிரவைக்கும் சைபர் மோசடி - Cyber Crime in Chennai