திருச்சி: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அதாவது, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் தற்போது 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியில், அஷரப் அலி என்பவர் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று (பிப்.10) அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனையைத் துவக்கினர். மேலும், வீட்டின் உள்ளே 5 அதிகாரிகள் சென்று, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் திருச்சி இபி ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.
இதனிடையே, அங்கும் என்ஐஏ அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இவருடைய உறவினர் வெளிநாடுகளில் இருந்ததாகவும், மற்ற உறவினர்கள் அங்கே சென்று அடிக்கடி அவரை பார்த்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. சோதனை நடக்கும் இடத்தில் 4க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், நிதி வசூல், மூளைச்சலைவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் போன்றவற்றின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், சுமார் 20க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.