கன்னியாகுமரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த முஷாவீர் உசேன் சாஹிப் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அவரது கூட்டாளியான அப்துல் மாத்திரன் டாஹா என்பவருக்கும் இதில் தொடர்புள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரண்டு பேரும் தற்போது கேரளாவில் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதான ராஜா முகமது என்பவருக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய பங்கு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
ராஜா முகமது கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ராஜா முகமது கடந்த 2022ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தை அடுத்த சாங்கை பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஆறு மாதம் தங்கி இருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, கொச்சி என்ஐஏ பிரிவு அதிகாரிகள், ஆய்வாளர் பிஜு தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் மார்த்தாண்டத்திற்குச் சென்று, ராஜா முகமது தங்கி இருந்த வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டின் உரிமையாளரைப் பிடித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
ராஜா முகமது வீட்டில் தங்கி இருந்த போது யாரெல்லாம் வந்து போனார்கள், அவருடன் எத்தனை பேர் அடிக்கடி தங்கினார்கள் என முழு விவரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து தெரிந்து கொண்டனர். இதில் ராஜா முகமது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தங்கி இருந்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும், அவர் தற்போது இங்கு இல்லை எனவும், வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் மார்த்தாண்டத்தில் தங்கி இருந்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது