கோயம்புத்தூர்: தமிழகத்தில் கோவை, திருச்சி, தென்காசி என பல இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இல்லம் மற்றும் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (பிப்.2) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் சேலம் அடுத்த ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில், ஓமலூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், இளைஞர் இருவரிடமிருந்து பிஸ்டல் ரகத்திலான 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25), மரமண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டதாரிகளான இவர்கள், யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போல, தாங்களும் ஒரு இயக்கத்தை தமிழகத்தில் தொடங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, இருவர் மீதும் ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோவை, திருச்சி, தென்காசி என 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இல்லம் மற்றும் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான ரஞ்சித் வீட்டில் தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல, காளப்பட்டி பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான முருகன் என்பவரின் வீட்டில் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில், முருகனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், சோதனையை முடித்துவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!