சென்னை: கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு காரணமாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கோவை உட்பட சுமார் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நான்கு பேரை கைது செய்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 6 மடிக்கணினிகள், 25 செல்போன்கள், 36 சிம்கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.
மேலும், இந்த சோதனையானது தீவிரவாத மயமாக்குதல் ஆட்சேர்ப்பு வழக்கு தொடர்பாகவும் 11 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதில் சென்னை அரபு கல்லூரி மற்றும் கோவை அரபு கல்லூரி தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் அரபு மொழிகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டு இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் இணைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்ட 25 செல்போன்கள் 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள் 36க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்டவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதில் கிடைக்கும் தகவலை வைத்து அடுத்த கட்ட சோதனையும் விசாரணையும் நடத்த உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை பெருமழைக்கு இதுதான் காரணமா? இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள பெருந்திட்டம்? - ஆட்சியர் சொல்வது என்ன!