சென்னை: ரூபாய் 2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த சதானந்தம் என்பவரைச் சென்னையில் வைத்து நேற்று முன்தினம் (மார்ச்.12) மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சதானந்தத்தை டெல்லி அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சென்னை மற்றும் திருச்சியில் குடோனில் வைத்து உணவு பொட்டலங்கள் பெயரில் போதைப் பொருட்களைத் தயார் செய்து வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கு சொந்தமான சென்னை பெருங்குடி குடோனில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய பொதுத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள சதானந்தத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
2018ல் நடந்தது என்ன?: அதில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜாபர் சாதிக்கும், சதானந்தம் 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு 1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போதை பவுடர் கடத்தல் விவகாரத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு சதானந்தம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட சதானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்திருப்பதாகவும் மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தாளவாடிக்கு இன்று முதல் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்!