சென்னை: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், இன்று (பிப்.2) காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். திருச்சி,கோவை, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ அமைப்பு தெரிவித்ததுள்ளது.
மேலும், இது குறித்து என்ஐஏ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த 2022ஆம் ஆண்டில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூன்று நபர்கள் துப்பாக்கியுடன் தமிழ்நாடு க்யூ பிரிவு காவல்துறையினரிடம் பிடிபட்டனர். அந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், யூடியூப் பார்த்து துப்பாக்கி தயார் செய்தது தெரிய வந்தது.
இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். என்.ஐ.ஏ விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளாக இருப்பதும், அந்த இயக்கத்தை மீட்டு உருவாக்கம் செய்வதற்காக முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வழக்கினுடைய தொடர்ச்சியாகதான், இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக” என்ஐஏ அதிகாரிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சோதனையின் முடிவில் ஒரு லேப்டாப், 7 செல்போன், 8 சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களைக் கைப்பற்றி இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்கள், அதன் தொடர்பான குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இந்த வழக்கில் தொடர்புள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை” - சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்!