சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டி, கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதே நேரத்தில் சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மேகநாதன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள், தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், டி.ஜி.பி.எஸ் எனும் நவீன தொழில்நுட்பம் மூலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதுநாள் வரை 749 ஹெக்டேர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சி வசம் இருந்த 173 ஹெக்டேர் நிலத்தில், 40 ஏக்கர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல எல்காட் நிறுவனம் வசம் 163 ஹெக்டேர் சதுப்பு நிலமும், ரயில்வே துறை வசம் 47 ஹெக்டேர் பரப்பும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திடம் 20 ஹெக்டேர் பரப்பு நிலமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது தவிர 15 ஹெக்டேர் பரப்பில் பாரி நகர், மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், மா.பொ.சி நகர் ஆகிய குடியிருப்புகள் அமைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, சென்னை மாநகராட்சி மாற்று இடத்தை கண்டறிந்து, சதுப்பு நிலம் அதன் பழைய நிலையை அடைய அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்திய தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எப்படி அப்புறப்படுத்துவது? என்ற தீர்வை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் முறையீடு என்ன?