மதுரை: நியூசிலாந்து நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து மதுரையில் கல்வி கண்காட்சி நடத்தின. இந்த கண்காட்சியை, மதுரையிலுள்ள ஏகே கன்சல்டன்ஸி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதுகுறித்து அதன் முதன்மை நிர்வாகி ஆலடி அருண் கூறுகையில், "மதுரையில் இந்த கண்காட்சியை முதன் முதலாக நடத்துவதற்கு நியூசிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
நியூசிலாந்திலுள்ள உலகத்தரம் வாய்ந்த ஆக்லாந்து பல்கலைக்கழகம், ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நியூசிலாந்து அரசு தொழில்நுட்பக் கழகம் உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
நமது மாணவர்கள் ஏன் நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் பயில வேண்டும், அங்குள்ள கல்வி முறை, வேலை வாய்ப்புகள், பகுதி நேர வேலை வாய்ப்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வழிகாட்டுகின்றனர்.
இதுதவிர, எங்களது ஆலோசனையின் வாயிலாக, நியூசிலாந்து சென்று படித்து வேலைவாய்ப்பினை பெற்ற முன்னாள் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கூட இங்கு வருகை தந்துள்ளனர். அந்நாட்டில் பயில விரும்பும் மாணவர்களுக்கான கல்விச் செலவின் பொருட்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன" என்றார்.
நியூசிலாந்தில் பயின்று, அங்கேயே பணியாற்றி வரும் கார்த்திக் என்ற மாணவரின் தந்தை ராமசாமி கூறுகையில், "ஆலடி அருண் வழிகாட்டுதலின் பேரில், எனது மகன் கார்த்திக் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் முதுநிலை பயின்றார். படித்து முடித்ததும் சிலிகான் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
ஏகே கன்ஸல்டன்சி மூலமாகச் செல்லும் மாணவர்களுக்கு, சிறந்த வழிகாட்டுதல் தரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, எனது நண்பரின் மகனுக்கும், வைக்காட்டோ பல்கலைக்கழகத்தில் பயிலத் தேர்வாகியுள்ளார்" என்றார்.
நியூசிலாந்து ஈஐடி என்ற தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றும் சிவா கூறுகையில், "நான் பணியாற்றும் ஈஐடி, நியூசிலாந்து அரசால் நடத்தப்படுகிறது. இது போன்ற 14 கல்வி நிறுவனங்களும், 8 பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆகையால், மதுரை மாணவர்கள் நியூசிலாந்தில் இளநிலையிலிருந்து ஆய்வுப் படிப்பு வரை பயில வாய்ப்பு உள்ளது. பொதுவாக, நமது பெற்றோர், பல்கலைக்கழகத்தில் தங்களது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
நான் கடந்த 1996ஆம் ஆண்டு கணினி படிப்பு பயில்வதற்காக நியூசிலாந்து சென்றபோது, அப்ளைடு லேர்னிங் என்ற செயல்முறை அடிப்படையில்தான் கற்றுக் கொண்டேன். நியூசிலாந்து கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் வழங்குகின்ற கல்வி அனைத்தும் அதிநவீன முறையில், அவரவர் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில் அமைந்திருக்கும்.
இது அவர்களின் வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும். நியூசிலாந்து நாட்டில் கல்வி வாய்ப்புக்காக மட்டுமே அங்கு யாரும் செல்வதில்லை. அதற்கு பிறகு கிடைக்கும் வேலை உத்தரவாதம்தான் அங்குள்ள கல்வி முறையின் சிறப்பு.
அனைத்து கல்வி வாய்ப்புகள் இருந்தாலும் கூட, தொழில் சார்ந்த படிப்புகளுக்கான பணி வாய்ப்புகள் அதிகமுண்டு. நான் பயில்கின்ற தொழில்நுட்பக் கழகத்தில் மாஸ்டர் ஆஃப் ஐடி, மாஸ்டர்ஸ் இன் அப்ளைடு மேனேஜ்மென்ட், மாஸ்டர்ஸ் இன் டிஜிட்டல் பிசினஸ் மேனேஜ்மென்ட், மாஸ்டர்ஸ் இன் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், மாஸ்டர்ஸ் இன் ஹெல்த் சயின்ஸ், அதேபோன்று இளநிலையிலும் நிறைய கல்வி வாய்ப்புகள் உள்ளன.
நான் சொல்லக்கூடிய இந்த படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு நியூசிலாந்தில் அதிகம் உள்ளன. இதனை நமது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கற்றுக்கொள், உனது படிப்பில் சிறந்து விளங்கு, வேலையைப் பெறு என்பதுதான் நியூசிலாந்து நாட்டிலுள்ள கல்வியின் தாரக மந்திரம். படிப்புக்கேற்ற வேலைதான் அங்கு கிடைக்கும். அதற்கு பிறகு நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்" என்றார்.
இதையும் படிங்க: மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்; வைரலாகும் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள்!