சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு புதியதாக BS6 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதிக் கொண்ட 200 பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 60 பேருந்துகள் ஜூலை மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் காலவதியாகியும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே அதனை மாற்றி புதியப் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டு, பேருந்துகளை கொள்முதல் செய்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 பேருந்துகளை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய அதிநவீன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, பாடி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
முதல்கட்டமாக 60 பேருந்துகள் ஜூலை மாதத்திற்குள் பாடி கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதில், 50 பேருந்துகளில் கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் படுக்கை வசதிகள் செய்யப்படுகிறது. மேலும், இருபது உட்காரும் இருக்கைகள் ஒரு புறமும், இருபது படுக்கை வசதியும் செய்யப்படுகிறது. மீதமுள்ள 150 பேருந்துகளில் 15 படுக்கை வசதிகளும், 30 இருக்கையும் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்கட்டமாக ஜூலை மாதம் இறுதிக்குள் 60 பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், பேருந்துகள் வந்தவுடன் பிஎஸ் 6 வடிவமைப்பில் பாடிகட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறையின் மூலம் கூறப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பேருந்துகள் வடிவமைக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி? - வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!