தேனி: தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் பாண்டீஸ்வரிக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பாண்டீஸ்வரி சகோதரியான பரமேஸ்வரியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சங்கர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் பரமேஸ்வரிக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மருத்துவமனையில் குழந்தையை விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சங்கரை அணுகியதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தனது குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: சைதாப்பேட்டை டூ திருப்பூர்: போலீஸ் கட்டத்தில் மகாவிஷ்ணு.. பரம்பொருள் அறக்கட்டளையில் நடப்பது என்ன?
இந்நிலையில் நேற்று பரமேஸ்வரிக்கு தெரியாமல் குழந்தையை 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சைல்டு லைன் (CHILDLINE) குழுவினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தேனி வீரபாண்டி காவல் நிலையத்தில் சைல்ட் இன் குழுவினர் சங்கர் மீது புகார் அளித்திருந்தனர்.
இதுகுறித்து வீரபாண்டி போலீசார் சங்கரிடம், பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உண்மைதானா? எவ்வளவு பணம் பெற்று குழந்தையை விற்றார்? என்று சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து குழந்தையின் தந்தை சங்கர் விசாரணையின்போது, " செல்லூரில் உள்ள தனது அண்ணனுக்கு குழந்தை இல்லாததால் அவருக்கு கொடுத்ததாகவும், குழந்தையை தான் விற்பனை செய்யவில்லை" என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, சங்கர் மற்றும் பரமேஸ்வரை போலீசார் மதுரைக்கு அழைத்துச் சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.