வேலூர்: வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேர்ணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தைச் சார்ந்த சின்னி (20)என்பவர், ஜூலை 27ஆம் தேதி இரவு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார் .
இந்நிலையில், அவர்களுக்கு அன்று இரவு ஒன்றரை மணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 28ஆம் தேதி காலை, சின்னி பிரசவ வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளர். இந்த நிலையில், இன்று காலை சுமார் 8 மணி அளவில் பெண் ஒருவர் குழந்தையின் பாட்டியிடம் உணவு பொட்டலத்தைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு அக்குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
இவ்வாறு பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள நேரத்தில் கடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழந்தை கடத்தல் சம்பவத்தால் மருத்துவமனை நுழைவாயில் மூடப்பட்டு, கார், இருசக்கர வாகனங்கள் மக்கள் கொண்டு செல்லும் குழந்தைகள், கைப்பைகள் என மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினர் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்னர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் பிரசவ வார்டில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டும் குழந்தையை கடத்திய நபர் யார் என தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து பேசிய கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை, ‘தனது குழந்தையை காவல்துறையினர்தான் மீட்டுக் கொடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற கணவர் மாயம்.. தூத்துக்குடியில் தவிக்கும் குடும்பம்..!