திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில். இந்தத் திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலில் முக்கிய நிகழ்வாக நடப்பது ஆணித் தேரோட்டம். விழாவின் 9வது நாளில் நடக்கும் தேரோட்டமானது மிகவும் பிரபலமானது.
இந்தச் சூழலில் கடந்த 33 ஆண்டுகளாகக் கோயிலின் வெள்ளித் தேர் சிறு விபத்து காரணமாக ஓட்டம் தடைப்பட்டுள்ளது. என்னதான் தங்கத் தேர் இயக்கத்தில் இருந்தாலும், வெள்ளித் தேர் இயங்காமல் இருப்பது பக்தர்களின் பெரும் குறையாக உள்ளது. இந்த நிலையில், மீண்டும் வெள்ளித்தேரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருந்தியிருந்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபுவிடம் நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித்தேரை மீண்டும் இயக்க வேண்டும் என நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபுவின் வாக்குறுதியின் படி வெள்ளித் தேரை செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர்கள் திட்ட வரைவு தயார் செய்தனர். வெள்ளித்தேர் தயார் செய்வதற்கான தேக்குமரம், வெள்ளி இரண்டும் தேவையான அளவு வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டது. விரைவில் அதன் பணிகளைத் தொடங்குவதற்கும் கோயில் அறங்காவலர் குழு கமிட்டி முடிவு செய்தது.
அதன்படி இன்று (பிப்.24) வெள்ளித்தேர் பணிகளைத் தொடங்கத் தேர் செய்வதற்கான தேக்கு மரத்தடி ஒன்றைத் தேர்வு செய்து அதற்கு மாலைகள் சூட்டி நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை குளத்தின் விநாயகர் முன்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்தத் தேக்கு மரத்தடி ஊர்வலமாக அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் கொண்டு செல்லப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் தேர் செய்யும் தச்சுப் பணிகள் நடைபெறக்கூடிய ஆயிரம் கால் மண்டபத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கும் பூஜைகள் நடத்தப்பட்டு பெரியோர்கள் முன்னிலையில் பணிகள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நெல்லையப்பர் கோயில் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் வெள்ளித்தேர் ஓட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'AI' - ஜெயலலிதாவின் குரலில் ஈபிஎஸ் வெளியிட்ட ஆடியோ!