திருநெல்வேலி: தமிழகத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனை என்று பெயர் பெற்ற நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில், தேர்ச்சி விகிதம் குறைந்து, கடைசி இடத்தில் இருப்பது மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில், நான்காம் ஆண்டில் மட்டும் சுமார் 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தன.
இந்த முடிவுகலில் சென்னை கீழ்ப்பாக்கம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் MMC போன்ற கல்லூரிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதங்கள் பெற்றுள்ளன. அதே போல் தென் மாவட்டங்களான தூத்துக்குடியில் 65 சதவீத தேர்ச்சி விகிதமும், மதுரையில் 59 சதவீத தேர்ச்சி விகிதமும் பெறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில், நெல்லை அரசு மருத்துவர் கல்லூரி தேர்ச்சி விகிதங்களில் 55 சதவீதம் மட்டுமே பெற்று, கடைசி இடத்தில் உள்ளது. தற்போது இளநிலை மருத்துவ பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களின் இந்த தேர்ச்சி விகிதங்கள் ஒட்டுமொத்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தற்போது நான்காம் ஆண்டு பயிலும் இந்த மாணவர்கள் இறுதி ஆண்டு படிப்பை பயின்று வருகின்றனர், அடுத்த ஆண்டு உள்ளிருப்பு மருத்துவர்கள் என்று சொல்லப்படக்கூடிய ஹவுஸ் சர்ஜன் பணியை இவர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் தற்பொழுது தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொது அறுவை சிகிச்சை பாடப்பிரிவில் மட்டும் சுமார் 106 மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்த பத்து நாட்களுக்குள் சப்ளிமெண்டரி எக்ஸாம் என்று சொல்லப்படக்கூடிய துணை தேர்வுகள் வைத்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு தரமான சிகிச்சைகளை வழங்குவதில் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமனை என்று பெயர் எடுத்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் இந்த குறைவான தேர்ச்சி விகிதம், ஒட்டுமொத்த மருத்துவ கல்லூரியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.