திருநெல்வேலி: நெல்லை அருகே தாழையூத்து ஊராட்சி உள்ளது. இங்கு கடந்த 2011ம் ஆண்டு கிருஷ்ணவேணி (40) என்ற பெண் பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், தாழையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் சுகாதார வளாகம் கட்டுவது தொடர்பாக கிருஷ்வேணிக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த பகையை மனதில் வைத்து கொண்டு 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி கிருஷ்ணவேணியை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கிருஷ்ணவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
இது தொடர்பாக அப்போது தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பு என்ற சுப்பிரமணியன் (60), சுல்தான் மைதீன் (60), கார்த்திக் (31), பிரவீன் ராஜ் (32), ஜேக்கப் (32), விஜய ராமமூர்த்தி (31), நடராஜன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ) நடந்து வந்தது.
இதையும் படிங்க: தோழி கண்முன்னே பறிபோன உயிர்.. தலை நசுங்கியதால் புகைப்படத்துடன் இறுதிச்சடங்கு!
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகளில் ஒருவரான நடராஜன் இறந்துவிட்டார். இந்த நிலையில், வழக்கு இறுதி விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வழக்கை விசாரித்து, சுப்பு என்ற சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், பிரவீன் ராஜ், ஜேக்கப், விஜயராமமூர்த்தி ஆகிய 6 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பு கூறினார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து 6 பேருடைய தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளிகளில் 4 பேருக்கு தலா ரூ. 1.30 லட்சம் அபராதமும், மற்ற 2 பேருக்கும் தலா ரூ.1.10 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் கந்தசாமி ஆஜராகினார்.
பதவியில் இருந்த பஞ்சாயத்து தலைவி கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்