திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். அதேசமயம், அங்குள்ள புன்னை வெங்கப்பன் குளம் என்ற குளத்துப் பகுதியில் மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி குளத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குடியிருப்புகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், நீர்வழி புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவருக்கு பட்டா வழங்கப்பட்டிருந்தால், அந்த பட்டாவையும் ரத்து செய்து இடங்களை காலி செய்ய வேண்டுமென மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தங்களின் வீடுகளை இடித்து அகற்றக்கூடாது, இப்பகுதியிலிருந்து காலி செய்ய உத்தரவிடக் கூடாது. இங்கேயே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேட்டை எம்ஜிஆர் நகர்ப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றியதோடு, கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "56 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்த நேரத்தில் ஊரே தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. அப்போது எங்கள் பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை. எங்களை புறம்போக்கு நிலத்தில் வசிப்பதாகக் கூறுகின்றனர்.
பட்டா வழங்க அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது வரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. எங்களை அப்புறப்படுத்தாமல் இந்த பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.