திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில், பாதி எரிந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஜெயக்குமாரின் உடல் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்து இன்று காலை ஜெயக்குமாரின் மகனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜெயக்குமாரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூர் கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அருகிலுள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தில் அடக்க ஆராதனை நடைபெற்றது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நெல்லை எம்பி ஞான திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அடக்க ஆராதனை நிறைவு பெற்ற பின்னர் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ஜெயக்குமாரின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியின் பிரமுகராக இருந்தாலும் தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடமும் காவல்துறையினரிடமும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் கமிட்டி அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கையை தேசிய தலைமையிடம் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.