திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) முடிவு பெற்றது. தொடர்ந்து. இன்று (மார்ச் 28) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அந்த வகையில், நெல்லை தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில், அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் கூறி, அவரது மனுவை ஏற்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியா தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பரிசீலனைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு என்னுடைய வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு, தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
என் மீது, பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடியைக் காட்டிய வழக்கு மட்டுமே உள்ளது. அதனைத் தவிர்த்து வேறு எந்த வழக்கும் கிடையாது. வேண்டுமென்றால், மீண்டும் என்னுடைய மனுவைப் பரிசீலனை செய்து கொள்ளட்டும். தமிழ்நாடு உட்பட பிற மாநிலத்திலும் வேறு எந்த வழக்குகளும் என் மீது இல்லை.
அவர்கள் கூறும் வழக்குகளில் என்னுடைய பெயர் இருக்காது. அரசியல் காரணமாக திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். இது தேர்தல் நேரம் என்பதால் இது போன்று பேசி வருகிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மேலும், முன்னாள் எம்.பி ராமசுப்புவைச் சந்திக்க இருக்கிறேன், என்னுடன் பிரச்சாரத்திற்கு அவரும் வர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
திருநெல்வேலி ரயில்வே கோட்டத்தை உருவாக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாங்குநேரியில் பொருளாதார மண்டலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவேன். பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுமட்டுமல்லாது, குலவணிகபுரம் பகுதியில் உள்ள பாலத்தை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நெல்லை மாவட்ட மக்களுக்கு ஏற்கனவே நான் பரீட்சயம் பெற்றவன். நான் ஏற்கனவே இங்கு பணியாற்றி இருக்கிறேன். எனக்கு எதிராகவும், போட்டியாகவும் யாரையும் நான் நினைக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு ஏற்பு!