சென்னை: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று இரவு சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக, பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 10 விமானங்கள், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் நேற்று நள்ளிரவு சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதன்படி, சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் டெல்லி, மும்பை, கோவா, ஹைதராபாத், ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பெங்களூர் சென்ற மொத்தம் 10 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்து தரையிறங்கின.
இந்நிலையில், வெவ்வெறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுத்தன. அதன் பின்பு, இன்று அதிகாலை பெங்களூருவில் வானிலை சீரடைந்து விட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சென்னையில் இருந்து அந்த பத்து விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருவிற்கு புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 78 பேர் பணியிட மாற்றம் - சென்னை ஐக்கோர்ட் பதிவாளர் உத்தரவு! - Judges Transfer In TN