சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பை பெற்றுள்ள நிலையில் அதிமுக, திமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இன்று இக்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுபாடுகள்: ஏழு கட்டங்களாக நடக்க உள்ள இத்தேர்தலில், தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு கட்டுபாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வேட்பு மனு தாக்கல் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும். வேட்பு மனு தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்பாளருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் அனுமதியளிக்கப்படும். மாலை 3.00 மணிக்கும் மேல் யாருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் அனுமதி கிடையாது. குறிப்பாக, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் கணக்கு விபரங்களையும் வேட்பாளர்கள் சுய உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட வேண்டும். சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் அரசியல் விளம்பரங்களுக்கும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதியே கடைசி நாளாகும். இதற்கு இன்னும் இரண்டே நாள் மட்டுமே உள்ளதால், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் சுமார் 78 பேர் வரை மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்களின் மீது மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 29ஆம் தேதியே கடைசி நாளாகும். ஆகவே, முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை பொருத்தவரையில், வட சென்னை தொகுதிக்கு 10 பேரும், தென் சென்னை தொகுதிக்கு 2 பேரும், மத்திய சென்னை தொகுதிக்கு 2 பேரும் என மொத்தம் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் தேர்தலில் போட்டி..திமுகவின் ஊழல் பட்டியல் ரெடி' - ஈபிஎஸ் ஆவேசம் - Edappadi K Palaniswami