சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்து உள்ளனர்.
இதில் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம் என்பவரை மட்டும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், உரிய விளக்கம் கேட்டு தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணை குழுவில், எஸ்சி எஸ்டி ஆணையத்தின் உறுப்பினரான ராமச்சந்தர், சென்னை இயக்குனர் ரவிவர்மன், ஹைதராபாத் இயக்குனர் ஜெகன்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து அவரிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
அதனையடுத்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வைத்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, சென்னை காவல் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளர் லட்சுமி பிரியா மற்றும் ஐஜி ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்டோரிடமும் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள், கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் தானா போன்ற கேள்விகளை கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னென்ன எடுக்கப்பட உள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைப்பதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய அதிகாரிகள், விளக்கத்தைப் பெற்ற பின் அறிக்கையாக தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிற்கும் அனுப்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை; நினைவேந்தல் பேரணிக்கு பா.ரஞ்சித் அழைப்பு!