சென்னை: மெரினா கடற்கரையை போலவே, எண்ணூர் தொடங்கி கோவளம் வரையிலான 20 கடற்கரைகளை மேம்படுத்தும் நோக்கில், 'சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை' சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து சிம்டிஏ கூறுகையில், "இந்த திட்டத்தின் மூலம், கடற்கரைப் பகுதிகளில் திறந்தவெளி பார்க், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான மைதானம், மரப்பாலம், கடல் காட்சிப் பாலம், ஆம்பி தியேட்டர் இருக்கைகள், நீர் விளையாட்டு, நடைபாதை, சைக்கிளிங் ட்ராக், கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிதாகக் கொண்டு வரப்படும்.
மேலும், கடலோர சமூக மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு, மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் மீனவ சமூகக்கூடம், கடல் அரிப்பு தடுப்புச்சுவர், மீன் உணவு விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்" என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளில் சி.எம்.டி.ஏ ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மீனவ மக்கள் சார்பில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் கடற்கரை மணல் பகுதியை சமப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில நாளிதழில் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதேபோல், ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக சரவணன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாரயணா மற்றும் உறுப்பினர் சத்தியகோபால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல், மத்திய சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறாமல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது" என சிஎம்டிஏவுக்கு தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ் போட்ட கேர்ள்ஸ்.. கேஸ் போட்ட ரயில்வே போலீஸ்.. திருச்சி சம்பவம்!