அரக்கோணம்/சென்னை: தமிழகத்தின் உள் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பகுதியில் இருந்து தெற்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில், தென்னிந்திய பகுதிகளில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். வடதமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இதனையொட்டி இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அளித்து வருகின்றனர். இன்றைய தினமும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ரிப்பன் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்கள்!
மழைக்காலங்களில் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளதாகவும், தாழ்வான பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற மோட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவு, குடிநீர் என அனைத்தும் உறுதி செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த அறிவிப்பில் 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாகவும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் வளாகங்களில் செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர கட்டுபாட்டு மையத்துடன் இணைந்தது செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டால் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட வீரர்களை விரைந்து செல்ல மீட்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், 300 மீட்பு படை வீரர்கள், நவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், கயிறு, மருத்துவ முதலுதவி கருவிகள் ஆகிய அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 13, 2024
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்: முன்னதாக, மத்திய வங்கக் கடலில் நாளை (அக்.14) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தொடர்ந்து அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கரையோரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக, தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.