கடலூர்: முந்திரியின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தேசிய முந்திரி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, தேசிய முந்திரி தின விழாவையொட்டி, பண்ருட்டியில் 150 ட்ரோன்கள் மூலம் முந்திரி பழம் மற்றும் முந்திரி பொருட்களை வானில் காட்சிப்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி பருப்பு உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. உலகளவிலும், தேசிய அளவிலும் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. பல்வேறு இடங்களில் முந்திரி பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்கென்று தனிச்சுவை உண்டு.
பண்ருட்டி முந்திரி: உலக முந்திரி சந்தையில் பண்ருட்டி முதன்மை இடத்திலும், தமிழகத்தின் மிகப்பெரிய முந்திரி சந்தையாக கடலூர் மாவட்டமும் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்டப் பகுதிகளில் முந்திரி காடுகள் அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்கின்ற முந்திரிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பண்ருட்டியில் 20 சதவீதம் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
தேசிய முந்திரி தின விழா: இந்நிலையில், தேசிய முந்திரி தின விழாவை முன்னிட்டு, நேற்று - சனிக்கிழமை (நவ.23) தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், காடம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய முந்திரி தினம் கொண்டாடப்பட்டது. இதில், 150 ட்ரோன்கள் மூலம் முந்திரி, இந்திய வரைபடம், முந்திரி பழம் மற்றும் முந்திரி பொருட்களை வானில் காட்சிப்படுத்தப்பட்டது.
உலக சாதனை: மேலும், இந்த நிகழ்ச்சி இது உலக சாதனையாக அங்கிகரிக்கபட்டு, விரிச்சுவல் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Virtual World Book of Record ) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. நிகச்சியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் ட்ரோன்கள் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல் காஜு கத்லி..10 நிமிடம் போதும்!
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, “ 5 ஆவது வருடமாக தொடர்ந்து நாங்கள் தேசிய முந்திரி தினத்தை கொண்டாடி வருகிறோம். இதில், மிகப்பெரிய முந்திரியை டிரோன்கள் மூலமாக வரைந்து, விரிச்சுவல் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளோம். முந்திரியின் நன்மைகள் மற்றும் பண்ருட்டியை உலகளவில் கொண்டும் செல்லும் நோக்கில் முந்திரி தினம் கொண்டாடி வருகிறோம்.
இதில், முந்திரி உற்பத்தியை பெருக்க இந்த வருடம் முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விவசாயிகளுக்கு, இலவசமாக 5 முந்திரி கன்றுகளை கொடுத்தும், மேலும் அவற்றை பராமரிப்பதற்கு ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளோம். இதன் மூலம், தேவையான முந்திரி கொட்டைகளை தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ள முடியும். மேலும், பண்ருட்டி பகுதிகளில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு மின்சார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்