மயிலாடுதுறை: ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் 4வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 13ஆம் தேதி நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் சேகர் - ஜெரினா தம்பதியினரின் மகன் வீரசிவாஜி என்ற மாணவர் கலந்துகொண்டு இறுதிப்போட்டியில் பஞ்சாப் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பின்னர், சொந்த ஊர் திரும்பிய வீரசிவாஜிக்கு, பல்லவராயன்பேட்டை கிராமத்தில் அச்சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் திரண்டு பட்டாசு வெடித்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும், வெற்றி பெற்ற மாணவனை சாலையில் இருந்து வீடு வரை தங்கள் தோளில் சுமந்துசென்று மாணவரின் வெற்றியை கொண்டாடினர்.
தங்கப்பதக்கம் வென்று வந்த தனது மகனுக்கு மகிழ்ச்சி பொங்க பெற்றோர்கள் கண்ணத்தில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து, சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் கூறுகையில், "இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர்.
ஆனால், பள்ளிக்காக விளையாட்டு மைதானம் இல்லாததால் பல கிலோமீட்டர் சென்று மயிலாடுதுறை ராஜந்தோட்டம் பகுதியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். எனவே, இப்பள்ளிக்கு என தனி விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என விளையாட்டுதுறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
பின்னர், உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி கூறுகையில், "இங்குள்ள மாணவர்களுக்கு பல விளையாட்டுகளில் நிறைய திறமைகள் உள்ளன. ஆண்டுதோறும் இங்கிருந்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்று பதங்கள் பெற்று கொடுக்கிறோம். தேசிய அளவிலான நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நமது மாணவன் வீர சிவாஜி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இதுகுறித்து மாணவர் வீர சிவாஜி கூறுகையில், "நான் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். நான் மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றேன். பின்பு தேசிய அளவிலான போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த NEED அறக்கட்டளை என்ஜிஓ சாருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம்: ஓபிஎஸ், சசிகலா தலைமையை கேட்கிறார்களா? - கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு! - KC Veeramani about ops and sasikala