மயிலாடுதுறை: நரிக்குறவர்கள் என்று அழைக்கப்படும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களில் பலருக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர்களுக்கு அரசு சான்றிதழ் கிடைப்பதற்கு சில தடைகள் இருந்து வந்ததால் பலராலும் கல்வி கற்க இயலாத நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்படிப் பல தடைகளைத் தாண்டி, மயிலாடுதுறையில் உள்ள நரிக்குறவர் மாணவர்கள் 6 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவர்கள், பயன்பெறும் வகையில் குடியிருப்புக்கு உள்ளேயே தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரில் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டு, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை இலவசமாகக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பின்னரும் மாணவர்கள் கல்வியைத் தொடர, அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு படித்த மாணவர்களில் 20க்கும் மேற்பட்டோர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு புொதுத் தேர்வில் இங்கு பயின்ற 8 நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களில் வெண்ணிலா, அர்ஜுன், சக்தி, ஈஸ்வரன், சஞ்சய், தனலெட்சுமி ஆகிய 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் வெண்ணிலா என்ற மாணவி 500க்கு 357 மதிப்பெண்கள் எடுத்து அவரது சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
10ம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நீடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயசுந்தரம், சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் மற்றும் நரிக்குறவ சமுதாய மக்கள் என அனைவரும் இனிப்புகள் வழங்கி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
முன்னதாக, இதே குடியிருப்பைச் சேர்ந்த வீரசிவாஜி என்ற மாணவர் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியிருந்த நிலையில், அவர் 600க்கு 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை