நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்திற்குட்பட்டது ஊனாங்கல்பட்டி. இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் பொங்கல் சிறப்பாக வினோதமான 'மாடுகள் பூ தாண்டும் திருவிழா' நடத்தபட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று (ஜனவரி. 17) 'மாடுகள் பூ தாண்டும் திருவிழா' வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் பாரம்பரியம்: இந்த விழா 200 ஆண்டுகளுக்கும் மேலாக 5 தலைமுறைகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காப்பு கட்டிய மறுநாள் முதல் ஊர் ஊராக சென்று, நன்கொடை வசூல் செய்கின்றனர்.
பின் சின்னபெத்தம்பட்டி , மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி, கொமரிபாளையம் ஊராட்சி, ஊனாங்கல்பட்டி, பரளி ஊராட்சி ஒத்தையூர், நல்லையம்பட்டி, என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டி, லத்துவாடி ஊராட்சி தொட்டிப்பட்டி, எஸ்.வாழவந்தி ஊராட்சி மேலப்பட்டி, திண்டமங்கலம் ஊராட்சி வடக்குப்பட்டிஉள்ளிட்ட 8 கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த காளையை ஒரு வருட கால பராமரித்து வருவர். அதையடுத்து பொங்கல் பண்டிகை நடைபெறும் இந்த மாடு பூ தாண்டும் திருவிழாவிற்கு அழைத்து வரப்படுவர்.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்!
மாடுகள் பூ தாண்டும் திருவிழா: அதனைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள் துாள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர். கோவில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை, பூ தாண்டும் விழாவாக, அந்த சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதில் முதலாவதாக கோட்டை தாண்டு மாடுகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த கன்று குட்டியும் அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஊர் மாடும் ஒரு சமயத்தில் பூவை தாண்டி வெற்றி பெற்றது. அதற்கு பரிசு வழங்கியும், மாட்டை சிறப்பாக பராமரித்தற்காக ஊர் தலைவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கு பூஜை செய்து ஊர் பெரியோர்களுக்கு பரிவட்டம் கட்டி குதிரை மீது அமர வைத்து நடனமாடி கோயிலை சுற்றி வந்து சிறப்பிக்கப்பட்டனர். இவ்விழாவில் ஊனங்கல்பட்டி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.