நாமக்கல்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்த்தாய் வாழ்த்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என பேசி வருகிறார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இதன் காரணமாக சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் வழக்கறிஞர்கள் திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் வெங்கட்ராமனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் தமிழர்களின் மனதை புண்படும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மக்களை நேரில் சந்திக்க முடியாதவர்தான் எம்.பி.யாக உள்ளார்" - துரை வைகோவை விமர்சித்த அதிமுக நிர்வாகி!
இதுகுறித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணியின் தலைவர் சுரேஷ் பாபு கூறும்போது, “கடந்த இரண்டு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் ஒரிங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப்பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி கொண்டிருந்தார்.
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தையே நீக்கி விடுவேன் என்று ஆணவமாக பேசி உள்ளார். இந்த நிலை நீடித்தால் நாளை தேசிய கீதத்தை பற்றி பேசுவார். அவர் பேசுவது எல்லாமே தேசவிரோத செயல் தான். ஆகவே சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்