திருச்சி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நடைபெற உள்ளது இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில், திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் என்ற பெண், பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார்.
இவருடைய பெற்றோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர். இவர்கள் இலங்கையிலிருந்து வந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் முகாமில் 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நளினி கிருபாகரன் என்ற பெண், 1986ஆம் ஆண்டு மண்டபம் முகாமில் பிறந்தார்.
இந்திய நாட்டில் பிறந்தாலும், ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் இந்தியக் குடியுரிமை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. அதேபோன்று இருந்தவர்தான் நளினியும். அந்த வகையில், முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது அவருக்கு சட்டச் சிக்கல் இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து, வழக்கறிஞர்கள் உதவியுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அவர் அணுகினார். அப்போது, ஒரு ஆண்டுக்குப் பிறகு, பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டு பாஸ்போர்ட் கிடைத்தது.
இந்த நிலையில், பாஸ்போர்ட் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அடையாள அட்டை பெற தேர்தல் ஆணையத்திடம் இணைய வழி மூலமாக விண்ணப்பித்துள்ளார். ஆவணங்களை சரிபார்த்துத, தேர்தல் ஆணையமே அஞ்சல் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் அவர் கூறுகையில், "பல சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு, நான் இந்தியக் குடிமகளாக இருப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து, முகாமில் உள்ள அனைவருக்கும் இந்த உரிமை குறித்து ஒரு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும். அனைத்து நலத்திட்ட உதவிகளும் இலவச வீடுகள், இலவச மின்சாரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், எங்களுக்கு சுதந்திரமாக இருக்க இந்த முகாமில் உள்ள 75 குடும்பங்களில் வசிக்கும் சுமார் 250 நபர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.
எங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா?