சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "கள்ளக்குறிச்சி சம்பவம் எனக்கே மறந்து விட்டது.
ஆனால் திமுக கூட்டணி கட்சியினர் தொடர்ந்து சட்டமன்றத்தில் அவற்றை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். டபுள் இன்ஜின் தமிழ்நாட்டில் தடம் புரண்டுவிட்டதாக திமுக கூட்டணி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் தடம் புரண்டாலும், இந்த டபுள் இன்ஜின் டெல்லியில் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. அதேபோல் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் வாக்கு சேகரிப்பதை தடை செய்ய வேண்டும்" என்றார்
அப்போது குறுகிட்டு பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, "அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் டெல்லியில் தானே இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், "என்னை டெல்லி போகவிடாமல், மக்கள் விரும்பியும் தடுத்துவிட்டார்கள். சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை காவலர்களுக்கு 7 ஆண்டுகளில் பதவி உயர்வும், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு 10 ஆண்டுகளில் பதவி உயர்வுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். AI தொழில்நுட்பம் மிக மோசமான விஞ்ஞானத்தின் உச்சம். இவற்றைக் கட்டுப்படுத்த தவறினால் தேர்தலில்கூட நாம் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும். சொல்லாத தகவல்கள் சொல்லியதாக மக்களிடம் சென்று சேரும். இவற்றை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சுற்றுலா துறையை ஈர்க்கும் வகையில் தொழில் முதலீடுகள் - சட்டப்பேரவையில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்! - TAMIL NADU INDUSTRY INVESTMENT PLAN