திருநெல்வேலி: நாட்டில் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மேலும், போட்டியிடும் வேட்பாளர் தங்களின் வேட்பு மனுக்களை 27ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில், பாஜக தரப்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. அதில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, அவரை தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் உள்பட தமிழகத்தின் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவருக்கு சால்வை போற்றி, இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனை அடுத்து செய்தியாளர்கள்ச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், "பல்வேறு தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பின்படி பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களில் வெற்றி பெறுவார் என்று கூறுகிறது. நான் வெற்றி பெறும் பட்சத்தில், எனது தொகுதிக்கு மத்திய அரசின் நிதிகளை முழுமையாக மக்களுக்கு பயன்படுத்துவேன்.
தாமிரபரணி நதியை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வேன். அதற்காக, மத்திய அரசின் நிதி மற்றும் மாநில அரசின் ஒப்புதல்களோடு அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், திமுக அரசு அறிவித்திருக்கும் சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் செயல்.
சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறிவிட்டு, ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இதன் விளைவுகள் தேர்தலில் முடிவுகளில் தெரிய வரும். மேலும், மார்ச் 25ஆம் தேதி காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் கடலூரில் களமிறங்கும் இயக்குநர் தங்கர் பச்சான்!