திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக தலைமையேற்று ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. அதேபோல், பாரதிய ஜனதா கட்சி நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளில், நட்சத்திர வேட்பாளர்கள் பலரை களமிறக்கி உள்ளது. ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரது வரிசையில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனும் நட்சத்திர வேட்பாளராக அறியப்படுகிறார்.
முன்னாள் மாநில அமைச்சரான நயினார் நாகேந்திரன், பாஜகவின் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும், தற்போதைய நெல்லை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, அவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இது போன்ற சூழ்நிலையில், நேற்று (ஏப்.06) சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், பாஜக உறுப்பினர் சதீஷ் மற்றும் இரண்டு பேரிடம் கட்டுகட்டாக கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நெல்லை தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் ஹோட்டல் உட்பட பல்வேறு தொழில்கள் இருக்கிறது. எனவே, சென்னையில் இருந்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக நயினார் நாகேந்திரன் பணத்தை எடுத்து வர சொன்னாரா என்ற கோணத்தில் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், நயினார் நாகேந்திரனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இன்று அவர் வழக்கம் போல் திட்டமிட்டபடி வள்ளியூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையில் நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில், கணேஷ் மணி என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பரிசுப் பொருட்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்படி, இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள், பீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கணேஷ் மணி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வேண்டப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் பணம் பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது பரிசுப் பொருட்கள் பிடிபட்ட விவகாரத்திலும் பின்னணியில் அவர் இருப்பதாகப் பேசப்படும் சம்பவம் அடுத்தடுத்து அவருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
இது குறித்து அறிந்து கொள்வதற்காக, வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவரது உதவியாளர் நம்மிடம் பேசினார். அவர் பேசும் போது, “அண்ணன் (நயினார் நாகேந்திரன்) பிரச்சாரத்தில் இருக்கிறார். தற்போது அவரால் பேச முடியாது” என தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முயற்சிக்கும் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக நெல்லை தொகுதி பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நெல்லை தொகுதியின் பாஜக வேட்பாளர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவது வேட்பாளருக்கும், அக்கட்சித் தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல்; நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த திமுக வலியுறுத்தல்!