தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆடுதுறையில் நேற்றிரவு (பிப்.4) நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்குமா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பாரத நாட்டிற்காக செய்திருக்கக்கூடிய சாதனைகள் அதிகம்.
இந்திய தேசத்தினுடைய ஒரு பெருமிதம் கொண்டவன் என்கிற முறையில், இந்திய நாட்டின் குடிமகன் என்கின்ற முறையில், இந்திய நாட்டை பொற்காலத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய தலைமை பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது எனக் கருதுகிறேன். இசை நாற்காலி போல அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சுற்றி சுற்றி வருகிறார்கள். தேர்தலுக்கு பிறகே யாருக்கு என்ன சீட்டு கிடைக்கும் என்பது தெரியும்.
சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களின் நிகழ்ச்சிகளில், எல்லா விதமான மக்களும் கலந்து கொண்டு ஒருங்கிணைந்து கொண்டாட முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்துக்காட்டி உள்ளது. நாகாலாந்தில், தமிழகம் குறித்த செய்திப் பத்திரிகைகள் அதிகம் வருவதில்லை. தொலைக்காட்சி செய்திகளையும் நான் பார்ப்பதில்லை. எனவே தமிழக அரசியல் நிலவரம் எனக்குத் தெரியாது. அது ஒரு பலவீனம் தான் என்ற போதும், ஒருவிதத்தில் அது நல்லது தான் எனக் கருதுகிறேன்.
ஒரு சில கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அந்த மாநில முதலமைச்சர்களுக்கும், மாநில ஆளுநர்களுக்கும் இடையே மோதல் நீடிப்பது ஏன் என்பது எனக்கும் புரியவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டும். அவரவர் (முதலமைச்சர் (அ) ஆளுநர்) அவர்களுக்கான வரைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் பின்பற்றி நடந்து கொண்டால், இத்தகைய பிரச்னைகள் வராது.
நான் தற்போது ஆளுநராக இருக்கும் நாகாலாந்திலும் சரி, இதற்கு முன்பு இருந்த மணிப்பூரிலும் சரி, 3 மாதங்கள் மட்டும் ஆளுநராக இருந்த மம்தா பேனர்ஜியின் மேற்கு வங்காளத்திலும் சரி, எங்கும் எனக்கு பிரச்னைகள் வந்ததில்லை. பஞ்சாப் சண்டிகர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பெறுப்பில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை, அவரும் குறிப்பிடவில்லை. இருப்பினும் வயது காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
அவர் எனது மரியாதைக்குரிய நல்ல நண்பர். தமிழகத்திற்கு மிகவும் அறிமுகமான நபர். அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது குறித்த தகவலை பத்திரிகை செய்தி வாயிலாக தான் நான் அறிந்தேன்" எனத் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது அவருடன் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் உடனிருந்தார்.
இதையும் படிங்க: 12 நாட்களில் 24 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் - பிரதமர் மோடி பெருமிதம்!