சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இருவரின் ஆதரவாளர்களும் மோதிக் கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் வைத்து முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை செளந்தரராஜனை அமித் ஷா கடிந்துகொள்வதான வீடியோ வெளியாகி பரபரப்பானது.
அமித்ஷா வீடியோ: எனவே, அண்ணாமலை விவகாரத்தில் தான் தமிழிசையை அமித்ஷா எச்சரித்ததாக அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்தது. மேலும், தமிழிசை சௌந்தரராஜனிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா நடந்து கொண்ட விதத்திற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் சா்ந்த நாடார் சமூகத்திலிருந்து பாஜகவுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
'பாஜக வளர்ச்சிக்கு நாடார் சமுதாயம் உறுதுணை': இதற்கு மத்தியில், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாடார் ஒற்றுமை இயக்க அமைப்பாளர் விக்னேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோவில், ''தமிழகத்தில் பாஜகவை வளர்க்க மிகவும் பாடுபட்டது தமிழிசை செளந்தரராஜன் என்பது அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. மேலும், தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு நாடார் சமுதாயம் உறுதுணையாக இருந்துள்ளது. தமிழிசை செளந்தரராஜன் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.. கறைபடியாத கைக்கு சொந்தக்காரர்.. சுத்தமான அரசியலை முன்னெடுத்து வரும் அக்கா கட்சியில் தனது சொந்த கருத்தை கூட சொல்ல உரிமை இல்லை என்றால் ஆணவப்போக்கை தான் காட்டுகிறது'' என சாடியுள்ளார்.
''பாஜக மிகப்பெரிய பின்னடவை சந்திக்கும்': மேலும், ''உங்கள் கருத்தை அலுவலகத்தில் பேசியிருக்கலாம். ஆனால், ஒரு பொதுமேடையில் தமிழ் சமூகத்தில் இருந்து இரண்டு மாநில ஆளுநராக சிறப்பாக செயல்பட்டவரை கால்மேல் கால் போட்டு ஆணவத்தோடு பேசுவதை பார்த்து விட்டு நாடார் சமூகம் சும்மா இருக்கும் என எப்படி நினைக்கிறீர்கள். அனைத்து நாடார் சங்கங்களும் அமித்ஷா மற்றும் பாஜகவுக்கு எதிராக அறிக்கை விட வேண்டும். அனைத்து சங்க தலைவர்களும் தமிழிசைக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அக்கா இக்கட்டான சூழ்நிலை இருக்கும் போது அவர் பக்கத்தில் இருந்தால் தான் உண்மையிலேயே நமது சமூகத்தின் பலம் என்ன என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். அக்காவை ஆணவத்தோடு பேசினால் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பின்னடவை சந்திக்கும்''என்றார்.
அதனை தொடர்ந்து, ''ஏற்கனவே நாடார் சமூக மக்கள் அதிகம் இருக்கும் நெல்லை தொகுதியில் நாடார்களுக்கு எதிராக ஒரு சூழ்ச்சியை செய்தீர்கள்.. தொடர்ந்து நாடார்கள் ஜெயித்துக் கொண்டிருப்பதால் நெல்லை தொகுதியில் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினீர்கள்.. இதே நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தியிருந்தால் நிச்சயம் பாஜக வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சாதி மோதலை தூண்டும் விதமாக நாடார் சமூகத்திற்கு எதிராகவும் வேறு சமூகம் வேட்பாளரை நிறுத்தியதால் பாஜக படுதோல்வி அடைந்தது''.
'கருத்தை சொல்ல உரிமை இல்லையா':''நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பதால்தான் தொடர்ந்து நாங்கள் ஆதரித்து வந்தோம். கடந்த 2019 தேர்தலில் கூட தூத்துக்குடியில் அக்காவிற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். ஆனால், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக செயல்பட கூடிய ஒரு சூழலை உருவாக்கி விடாதீர்கள், அவர்கள் சிய கருத்தை சொல்ல உரிமை இல்லாமல் நடந்து கொண்டால் நாங்கள் களத்தில் நிற்போம், நாடார் சமூக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவாக இருக்கும்''.
போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்: ''இந்த விஷயத்தில் உண்மையாகவே என்ன நடந்தது என்பதை அமித்ஷா தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் அல்லது அக்கா நடந்த சம்பவத்தை விளக்க வேண்டும். தமிழிசைக்கு தொடர்ந்து பாஜக இடையூறு கொடுத்தால் நாங்கள் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்'' என இவ்வாறு அந்த வீடியோவில் விக்னேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேவர் சமூகத்தை சேர்த்த நயினார் நாகேந்திரனை வேட்பாளராக நிறுத்தியதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் சமூக மக்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் உள்ள சுமார் 16 லட்சம் வாக்காளர்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மேலும், இதுவரை நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்நிலையில், முதல் முறையாக இந்த தேர்தலில் பாஜக மாற்று சமூகத்தை சேர்ந்தவரை களமிறக்கியது தேர்தல் நேரத்தில் நெல்லை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேடையில் கடுகடுத்த அமித்ஷா! தடுமாறிய தமிழிசை! என்ன நடக்கிறது பாஜகவில்?