தேனி: 18வது நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து அனைத்து கட்சியினரும் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மதன் ஜெயபாலனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தேனி அல்லிநகரம் பகுதியில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வேட்பாளரை ஆதரித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "டிடிவி தினகரன் தேனி தொகுதியில் இவ்வளவு சிரமபட்டு என்ன செய்ய போகிறார். உங்களையும், சசிகலாவையும் சிறையில் வைத்தது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனால், நீங்கள் பாஜக நல்லாட்சி தருகிறது என்று பிரச்சாரம் செய்து வருகிறீர்கள்.
எடப்பாடி பழனிசாமி உங்களுக்கு செய்தது துரோகம் என்றால் நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கு செய்ததும் துரோகம் தான். நீங்களும் பல ஆண்டுகளாக திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தான் வாக்களித்து வருகிறீர்கள். அதனால், உங்களின் வாழ்வாதாரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து இருக்கிறதா? என கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, "உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலி வாங்கி சின்னம். நாள் தோறும் பாடு பட்டோம். ஆனாலும் துன்ப பட்டோம். யார் யார்கோ ஓட்ட போட்டோம் ஓட்டாண்டி ஆகிபுட்டோம்" என பாட்டு பாடி வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ! தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! - PM Modi Road Show In Chennai