விழுப்புரம்: விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் ஜூன் 6-ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து ஜூலை 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
முன்னதாக தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நாளே திமுக தரப்பு வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்ட மருத்துவர் அபிநயாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடவுள்ளனர். அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (15.06.2024) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ''மக்களோடு தான் எங்களுக்கு கூட்டணி, ஓட்டுக்கு ஒரு ரூபாய் பணம் தர மாட்டோம், சின்னம் எங்களுக்கு முக்கியம் அல்ல. எண்ணம் தான் எங்களுக்கு முக்கியம் என்கிற கொள்கையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்திலேயே போட்டியிடுவார்களா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
சித்த மருத்துவர் அபிநயா: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக அரவிக்கப்பட்டுள்ள அபிநயா சித்த மருத்துவர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பில்லூர் கிராமத்தில் பிறந்தவர். அபிநயாவின் கணவர் பொன்னி வளவன். இவருடைய தந்தை விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையிலும் பொறுப்பாளராக இருக்கிறார்.
தடகள வீராங்கனை: விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த 28 வயதுடைய அபிநயா சிறந்த தடகள வீராங்கனையும் ஆவார். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். கல்வியில் சிறந்து விளங்குபவராக சொல்லப்படும் அபிநயா தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட நகர்வாக 'ஹோமியோபதி' துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை மருத்துவம் படித்தார்.
மேலும், இவர் மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். கணவருடன் சேர்ந்து சீமானின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவருக்கு 'அடிப்படை அமைப்பு... அரசியல் மாற்றம்' .. 'அறிவியல் கலந்த அரசியல்'.. என்ற சீமானின் கொள்கை முழுக்கப் பேச்சால் ஈர்க்கப்பட்டு, தேர்தல் அரசியலிலுக்குள் வந்திருக்கிறார்.
பாமக தோல்விக்கு காரணம்?: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அபிநயா, திமுக-வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி, பாமகவின் சௌமியா அன்புமணி குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதற்கு அபிநயா பெற்ற வாக்குகள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65,381 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறி கொடுத்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா அறிவிக்கப்பட்ட பின்னணி என்ன? அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு என்ன?
விக்கிரவாண்டியில் 2016 தேர்தலில் முதன் முதலாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட சரவணகுமார் வெறும் 534 வாக்குகளைப் பெற்று ஏழாவது இடத்தை பெற்றார். தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கந்தசாமி என்பவர் போட்டியிட்டு 2,921 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தொடர்ந்து 2021 நடைபெற்ற தேர்தலில் ஷீபாஆஷ்மி 8,216 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2016 தேர்தலில் இருந்து படிப்படியாக வாக்குகள் இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு அதிகரித்து வருவதை புள்ளி விவரங்களுடன் காண முடிகிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக பாமகவுக்கும் இந்த தொகுதியில் கணிசமான வாக்குகள் இருக்கின்றன. நேற்றைய தினம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இங்கு நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியுள்ள நிலையில் மும்முனைப் போட்டி இங்கே நிலவும் எனவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை தவிர்த்து தமிழகத்தில் தங்களுடைய பலம் என்ன என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாறியுள்ளது. மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 8.19 சதவீதம் வாக்கு பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தன்னுடைய முதல் தேர்தலை நாம் தமிழர் கட்சி எதிர்கொள்ள இருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன்.."- சர்ச்சை வீடியோ குறித்து குஷ்பு ஆவேசம்..!