சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (பிப்.2) காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், என்ஐஏ சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறைத் தலைவர் சேவியர் பெலிக்ஸ், மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு மனு மூலம் முறையீடு செய்தனர்.
என்ஐஏ சோதனை தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை இன்று பிற்பகலில் விசாரிப்பதாகக் கூறி அனுமதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!