சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் மற்றும ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து, கொரட்டூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, ஒலி வாங்கி (MIC) சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “முதலீடு செய்பவர் வேட்பாளராக நிற்கிறார்கள். 50 கோடி, 100 கோடி என முதலீடு செய்கிறார்கள். பீடி சிகரெட் தயாரிப்பவன் கூட அவனே விலை நிர்ணயம் செய்கிறான். விவசாயி, தனது பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாக்கு கேட்கிறார். மக்களுக்கு செய்ததை எதையாவது சொல்லி வாக்கு கேட்க துப்பு இருக்கிறதா?
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ரோட் ஷோ நடத்தி டாட்டா காட்டி வருகிறார். அவருக்கு மக்கள் ஏப்ரல் 19ஆம் தேதி டாட்டா தான் காட்ட வேண்டும். ஊழல், லஞ்சம் எல்லாத்தையும் சகித்து அடிமையாகிவிட்டார்கள் தமிழர்கள். இந்திய தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்று தான். காங்கிரசும், பாஜகவும் தேசியப் பிரிவினையைத் தூண்டுகிறது. கச்சத்தீவை தான்தோன்றித் தானமாக கொடுத்தது காங்கிரஸ். தேர்தலுக்குப் பின்னர் பெங்களூர் போன்று தண்ணீர் பஞ்சம் வரும்.
எங்கும் கருணாநிதி,எதிலும் கருணாநிதி என உள்ளனர். பாஜக 100 கேள்வி ஸ்டாலினுக்கு கேட்டது, நான் ஒரு கேள்வி கேட்டேன், இதுவரை பதில் இல்லை. கருப்பு பணம் ஒழிந்தது என்றால், எதற்கு ரெய்டு? ஸ்டாலினுக்கு இல்லாத பாதுகாப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படுகிறது. அண்ணாமலை கோழை, வீரமா பேசுறது தலைமை இல்லை, வீரமா வாழ்வதுதான் வீரம். என்னை ஆதரிக்கும் கூட்டம் பெருகி வருகிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து, விஜயின் விசில் போடு பாடலில் இடம் பெற்றுள்ள, “கேம்பைன் துவங்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா” என்ற வரிகளை சீமான் பாடினார். பின்னர், அவர் பேசுகையில், “இதன் மூலமாக சிலருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடல் பாட ஒரு மைக் கையில் வைத்து இருப்பது, எனது சின்னத்தை தான் வைத்து உள்ளனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தனியார் தொலைகாட்சி கருத்து கணிப்பு நடத்தியவர் மீது ஜூன் 4-க்குப் பிறகு வழக்கு தொடர உள்ளேன். மோடிக்கு வேலை செய்யுங்கள், மோடிக்கு வாக்கு செலுத்துங்கள் என கூறுங்கள். ஆனால், மற்றவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். மீண்டும் வாக்குச்சீட்டு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் கொண்டு செல்வோம். எனக்கு நடிகர்கள் நேரடியாக ஆதரவு தரமாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு உணர்வு இருக்கும், நேரடியாக ஆதரவு தந்தால் படத்தை இடைவிடாமல்,திரையரங்கை கொடுக்காமல் தடுத்து விடுவார்கள்.
இதனால் அச்சப்படுகிறார்கள். சிலரை நானே வரவேண்டாம் என கூறிவிடுகிறேன். கருத்து கூற வேண்டாம் எனவும் கூறுகிறேன். விஜய் பாடலில் மைக் குறித்து பாடியது நாம் தமிழர் கட்சி இளைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவர்களின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எங்களளை எதிர்த்து நிற்கும் எல்லோருக்கும் நடுக்கத்தை கொடுத்துள்ளது. ஃபேஷன் ஷோ போன்று மோடி வந்து செல்கிறார்” என்றார்.