திருச்சி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், பிரச்சாரம் கடந்த ஜூலை 8ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என திருச்சியைச் சார்ந்த அருண்குமார் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, திருச்சி அழைத்து வரப்பட்ட துரைமுருகன், சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காவல் சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜர்படுத்தி அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சுமார் 4 மணிநேரம் விசாரணை தொடர்ந்த நிலையில், சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SCST act) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஏற்கனவே, இதுபோன்ற அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற (PCR) நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை நீதிமன்றக்காவலுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்ததை அடுத்து, துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. ரூ.2 கோடி கேட்டு கடத்திய மாணவன் 3 மணி நேரத்தில் மீட்பு.. வெளியான பகீர் ஆடியோ! - school student kidnapped in madurai