சென்னை: குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ரவுடிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் சென்னை மாநகர காவல் ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், '' தினமும் புது திட்டங்களை அறிவிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை. காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் குற்றங்கள் குறையும். ரவுடிசத்தை கட்டுப்படுத்த என்கவுண்டர் கிடையாது. ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமோ அந்த வகையில் நடவடிக்கை இருக்கும்'' என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து, சென்னையில் ரவுடிகளை என்கவுண்டர் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக, திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவனுக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவியேற்ற அருண், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில், அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: TNUSRB தலைவர் சுனில் குமார் நியமனக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
அதன்படி, மாநகர காவல் ஆணையர் அருண் தாக்கல் செய்த பதில் மனுவில், எவரையும் மிரட்டும் வகையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை எனவும், குற்ற சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்ததுடன், தனது பெயரை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதை பதிவு செய்து கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்கில் இருந்து காவல் ஆணையரின் பெயரை நீக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்